சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமன கவுன்சிலிங், சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக சுமார் 7000 இடங்களை நிரப்ப, 8,500 பேர் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, க்ரூப்-2A, குரூப்-1 ஆகிய பிரிவுகளில் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில ஆண்டுகள் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. 2022ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.
அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த குரூப் 4 தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் மூலம், 7 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.
குரூப் 4 தேர்வு முடிவு கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,219-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10219-ஆக உயர்த்தப்பட்டு, கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.