சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு முன் மாணவர்களுக்கு மாலை சிறுதீனி வழங்கப்படும் என்றும் 100 சதவீத மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கப்படும் என்றும் சென்னை மேயர் பிரியா அறிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் கூறப்பட்ட செய்திகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
*சென்னை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளுக்கு முன் மாணவர்களுக்கு மாலை சிறு தீனி திட்டம் செயல்படுத்தப்படும்.
*சென்னை பள்ளிகளில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
*11ம் வகுப்பு மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக தொழிற்சாலைகளை பார்வையிட அழைத்துச் செல்லப்படுவர்.
* 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இணையதளம் வழியாக கற்றல் பயிற்சி வழங்கப்படும்.
* 12ஆம் வகுப்பில் 100 சதவிதம் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை 1000 ரூபாயில் இருந்து உயர்த்தி 10ஆயிரம் ஆக வழங்கப்படும்.
* 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100% தேர்ச்சி கொடுக்கும் ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். அவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.3,000ஆக உயர்த்தி வழங்கப்படும்.
* 9 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற உதவ, இணையதளம் வாயிலாக பயிற்சி வழங்கப்படும்.
* 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ், ஐஐஎம் பெங்களூரு, டெல்லி பல்கலைக்கழகம் ஆகிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.
* சென்னை பள்ளிகளில் அறிவியல் ஆய்வகங்களை மேம்படுத்த 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். *சென்னை பள்ளிகளில் பொது அறிவிப்பு முறை செயல்படுத்தப்படும்.
* பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமனம் செய்யப்படுவர்.
* சென்னை பள்ளிகளில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள 25 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* பள்ளிகளில் மாணவர்கள் திறனை ஊக்குவிக்க இசைக் கருவிகள் வழங்கப்படும். 20 பள்ளிகளுக்கு இசைக் கருவிகள் வழங்கும் வகையில், ஒரு பள்ளிக்கு 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
* பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள மாதிரி நாடாளுமன்ற குழு போல், மாதிரி ஐக்கிய நாடுகள் குழு அமைக்கப்படும்.
* மாணவர்களின் ஆங்கிலத் திறனை ஊக்குவிக்க சிறப்பு ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும்.
* பள்ளிகளில் இணையதள வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்’’.
இவ்வாறு மேயர் பிரியா அறிவிப்புகளை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வெளியிட்டுள்ளார்.