தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கான ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்நிலையில், யார் யாருக்கு ரூபாய் ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும் என்பது குறித்தான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று ரூபாய் 1000 உரிமைத் தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்களை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலும், டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள முகாம் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றின் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இதற்கான அதிகாரிகளிடம் ஒப்படைக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் 2 கட்டங்களாக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற இருப்பதாகவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஆய்வாளர்கள் உதவி செய்வார்கள் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
உறுதிமொழி:
ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக் ஆவணங்கள் தேவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உறுதிமொழி என்று தனியாக 11 பாயிண்டுகள் இருக்கிறது. அதில் ஆதார் தகவல்கள் எடுத்துக் கொள்ள அனுமதிப்பது, ஆண்டு வருமானம் உள்ளிட்டவை அரசு அறிவித்த வழிகாட்டுதல்கள் படியே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்குக் கீழ் தான் விண்ணப்பிக்கும் பெண்கள் கையெழுத்திட வேண்டும்.
வரும் செப். 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
ஒருவர் பணி உள்ளிட்ட காரணங்களால் வேறு ஒரு இடத்திற்கு வந்திருந்தாலும், அவர்களின் ரேஷன் அட்டையில் இருக்கும்
இடத்தில் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
கட்டுப்பாடுகள் என்னென்ன?
மேலும், யாரெல்லாம் இதற்குத் தகுதி பெறுவார்கள் என்பது குறித்தும் பல நிபந்தனைகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
- ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- குடும்பத்தில் உள்ளவர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கும் மேல் இருக்கக் கூடாது.
- மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரிவோர் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெற முடியாது.
- மேலும், சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிகாக்டர் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போரும் விண்ணப்பிக்க முடியாது.
- ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இதில் விண்ணப்பிக்க முடியாது.
இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் இதில் இருக்கிறது.